
‘அடுத்த அறிவிப்பு வரும் வரை’ இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் அபூ உபைதா அறிவித்துள்ளார்.
“கடந்த மூன்று வாரங்களாக, எதிரி படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதையும் ஹமாஸ் குழுவின் தலைமை கண்காணித்து வருகிறது.
வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் – குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்த பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ”ஹமாஸ் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடித்து வருகிறது. அதன்படி, வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இஸ்ரேலிய பணையகைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை, அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது”, என்றும் அபூ உபைதா குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, “இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்துள்ளமை போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாகும்” என, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
“காஸாவில் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், அதற்காக அதிக எச்சரிக்கையுடன் தயாராக இருக்கவும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்கவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒக்டோபர் 7ஆம் திகதியன்று ஏற்பட்ட நிலை போல மீண்டும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமுலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும்.
விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
இதையும் பாருங்கள்



