தலைப்புச் செய்திகள்

எம்.பிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்யும் தனிநபர் பிரேரணை முன்வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் தனிநபர் பிரேரணையொன்றை,புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (7) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரவிகருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை – ஒரு குறிப்பிட்ட கட்சி, மக்களிடையே தவறாக புரிய வைத்து, அதை சமூகத்திற்கு துரோகம் செய்வதாக சித்தரித்துள்ளதாகக் கூறினார்.

இந்த நிலையானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளது என்றும், எனவே, பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த பிரேரணையை தான் கொண்டு வந்ததாகவும் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்த சேவை செய்கிறார்கள் எனவும், பொதுத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

“தற்போதுள்ள சமூக எதிர்ப்பை அகற்றுவதற்காகவே இந்த முன்மொழிவை நான் முன்வைக்கிறேன். இதை நாம் மாற்றவில்லை என்றால், நாடாளுமன்றம் ஒரு நகராட்சி மன்றம் போல மாறும். கடந்த சில ஆண்டுகளாக, இது நாட்டிற்கு ஒரு தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகையில், நமக்கென ஒரு பிரச்சினையை உருவாக்குவதா அல்லது சமூகத்தில் அதிக நம்பிக்கையை வளர்ப்பதா என்பதை தீர்மானிக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்”என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் பாருங்கள்