தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) மதியம் யாழ்ப்பாணத்தில் வைத்து – பொலிஸ் விசேட குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கைதானார்.

கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் – அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி 20 ஆம் திகதி அனுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் – அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜனவரி 22 ஆம் திகதி, சரியான சந்தேக நபரை அடையாளம் காண்பதில் முரண்பாடு ஏற்பட்டதால், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை பெப்ரவரி 03ஆம் திகதிக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சென்றிருந்தபோது, ​​அவரை ரம்பேவ பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து நிறுத்தினர். இதன்போது பொலிஸாருடன் நாடாளுமுன்ற உறுப்பினர் முரண்பட்டார்.

நாடாளுமுன்ற உறுப்பினரின் வாகனத்தில் ‘வி.ஐ.பி’. என குறிப்பிடும் விளக்குகள் சட்டத்துக்கு முரணாக ஒளிர்ந்தமை தொடர்பில் பொலிஸார் சுட்டிக்காட்டியபோது, இந்த முரண்பாடு ஏற்பட்டது.

தொடர்பான செய்தி: “நான் அவனில்லை”: அனுராதபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்து அர்ச்சுனா எம்.பி தகவல்

இதையும் பாருங்கள்