தலைப்புச் செய்திகள்

கட்டாருக்கான இலங்கையின் முதல் பெண் தூதுவர் சித்தாரா கான் கடமைகளைப் பொறுப்பேற்றார்

ட்டார் நாட்டுக்கான இலங்கையின் முதல் பெண் தூதுவராக நியமிக்கப்பட்ட ரொஷான் சித்தாரா கான் அசாட், நேற்று (23) தோஹாவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்; இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பற்றியும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் கோடிட்டுக் காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதை விரைவுபடுத்தவும், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

கட்டார் தூதுவராக நியமிக்கப்பட்டடுள்ள சித்தாரா கான் அசார்ட், 1998 இல் இலங்கை வெளியுறவு சேவையில் இணைந்தார். இவர் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில், சார்க் மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான மேலதிக செயலாளராக பணியாற்றினார்.

கட்டாரில் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் லண்டன், சென்னை, தோஹா மற்றும் ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதரகங்களில் – அவர் பிரதி உயர் ஸ்தானிகராகவும், பதில் உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றினார்.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலைப் பட்டமும், இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். கொழும்பில் உள்ள மெதடிஸ்ட் கல்லூரியின் முன்னாள் மாணவியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதையும் பாருங்கள்