
– தில்சாத் பர்வீஸ் –
வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட கார் ஒன்று – சம்மாந்துறையில் விற்னை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பில் ஒருவரிடம் இருந்து 05 மாத காலத்திற்கு மதுகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் குறித்த வாகனத்தைப் பெற்ற நிலையில் – அந்தக் காரை வாடகைக்கு பெற்றவர், அதனை சம்மாந்துறைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அதிரடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த காரை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த காரை வாடகைக்குப் பெற்றவரிடம் – காரின் உரிமையாளர் கார் குறித்து விசாரித்த போது முரண்பாடான தகவல்களை அவர் கூறியுள்ளதோடு, கார் களவு போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது கார் சம்மாந்துறை பிரதேசத்தில் இருப்பதை அறிந்து கொண்ட உரிமையாளர், சம்மாந்துறை பொலிஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்தே பொலிஸார் காரை கைப்பற்றினர்.
பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையின் படி, கடந்த வருடம் 08ஆம் மாதம் குறித்த காரை 05 மாத கால வாடகைக்கு பெற்றவர், அக்காரை ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த – வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் டபிள்யூ.ஏ. சரத், சார்ஜன் ஏ.பி. நபார் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான, மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்கள்



