
– பாறுக் ஷிஹான் –
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை ஊடக மட்டத்தில் மேற்கொள்வது தொடர்பான செயலமர்வு இன்று (19) சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை – இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் ஒருங்கிணைப்பில் நடைபெறற இந்த செயலமர்வில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கங்கள் இந்த செயலமர்வில் வழங்கப்பட்டன.
“போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் அதன் அழிவுகரமான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் – ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த செயலமர்வில் ஊடகவியலாளர்களின் பங்கேற்பானது போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான எங்களின் முயற்சிகளுக்கு கணிசமான பங்களிப்பை நிச்சமாக வழங்கும்” என, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் கூறினார்.
இந்த நிகழ்வை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபர் ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ராசிக் நபாயிஸ், ஏ.ஜெ.எம். இக்ராம் உட்பட ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




