தலைப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவிகள் இல்லை

ராஜாங்க அமைச்சர் பதவிகள் இந்த அரசாங்கத்தில் இருக்காது என்றும், ஆனால் அதற்கு பதிலாக 26-28 பிரதியமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவார்கள் எனவும், டெய்லி மிரருக்கு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ; பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு – ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள். மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

இருந்தபோதிலும், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.