
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 31 வயதுடைய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர், பொரளையை வசிப்பிடமாகக் கொண்டவராவார். இவர் ஒரு மாத குழந்தையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் 2016 ஆம் ஆண்டு நொவம்பர் 08ஆம் திகதி – பொரளை புதிய மகசீன் சிறைச்சாலைக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது 11.07 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றினர்.
சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த வழக்கில் – நீண்ட விசாரணையின் பின்னர், நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட போது, குற்றவாளிக்கு எதிராக இதற்கு முன்னர் குற்றச்சாடடுகள் எவையும் பதிவாகவில்லை என்றும், அவர் அண்மையில் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளார் என்பதையும் – குற்றவாளியின் சட்டத்தரணி நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.
ஆயினும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.



