தலைப்புச் செய்திகள்

அறுகம்பே அச்சுறுத்தல்; கைது செய்யப்பட்ட மூவரில் வெளிநாட்டவர் எவருமில்லை: அமைச்சர் விஜித ஹேரத் தகவல்

றுகம்பே பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என சந்தேகிக்கப்பட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது அவர் இதனைக் கூறினார். புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் – மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் மேலும் விவரித்தார்.

இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் வெளிநாட்டு பிரஜைகள் எவரும் இல்லை என – அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

சாத்தியமான தாக்குதல்கள் குறித்த புலனாய்வு அறிக்கையை – இம்மாத தொடக்கத்தில் பெற்றவுடன், அரசாங்கம் முப்படையினருடன் இணைந்து அத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்ததாக அவர் மேலும் கூறினார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் – ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் இந்த விவகாரம் மற்றும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் – யூத வழிபாட்டு நிலையங்கள் நிறுவப்பட்டு வருவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் யூதர்களின் மதப் பண்டிகையை நினைவுகூர்வதே இதற்குக் காரணம் என்றார்.

யூதர்களின் பண்டிகையின் விளைவாக, இஸ்ரேலியர்கள் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் – மத அனுசரிப்புகளுக்காக இந்த வழிபாட்டு மையங்களை அமைத்ததாக கூறிய அவர், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றார்.