
பங்களாதேஷ் பிரதமர் பதவியை ராஜிநாமாச் செய்த ஷேக் ஹசீனா, அரசியலுக்குத் திரும்ப மாட்டார் என்று – அவரின் மகன் சஜீப் வாஜித் ஜாய் பிபிசிக்கு நேற்று (05) தெரிவித்துள்ளார்.
“நாட்டுக்காக கடினமாக உழைத்து பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அவர், தனக்கு எதிராக ஒரு சிறிய பகுதியினர் போராட்டத்தில் இறங்கியிருப்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளார்” என்றும் ஹசீனாவின் மகன் கூறியுள்ளார்.
ஷேக் ஹசீனாவின் மகனும் இன்று வரை பிரதமரின் உத்தியோகபூர்வ ஆலோசகராக இருந்தவருமான சஜீப் வாஜித் ஜாய் பேசினார்.
தனது தாயார் பதவியை ராஜினாமா செய்வது பற்றி நேற்றே (04ஆம் திகதி) பரிசீலித்ததாகவும், அவருடைய பாதுகாப்பு பற்றி அஞ்சிய குடும்பத்தினரின் வற்புறுத்தலால் நாட்டை விட்டே அவர் வெளியேறியதாகவும் சஜீப் வாஜித் ஜாய் தெரிவித்துள்ளார்.
தாயாரின் ஆட்சிக்காலத்தை பிபிசியிடம் நினைவு கூர்ந்த அவர்,”பங்களாதேஷின் முகத்தையே அவர் மாற்றியுள்ளார். அவர் பதவியேற்கும் போது பங்களாதேஷ்- தோல்வியில் பிடியில் உள்ள நாடாக பார்க்கப்பட்டது. அது ஏழை நாடாக இருந்தது. ஆனால், அதன் பிறகு இன்று வரையிலும் ஆசியாவில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டார் ” என்றார்.
போராட்டக்காரர்களை கடுமையாக நடத்தியதாக ஹசீனா அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த ஜாய், “நேற்று (04ஆம் திகதி) மட்டும் 13 பொலிஸார் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு கும்பல் மக்களை அடித்துக் கொல்லும் போது பொலிஸார் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என் கேள்வியேழுப்பினார்.
பங்களாதேஷில் தீவிரமடைந்த மாணவர் ஆர்ப்பாட்டம் காரணமாக, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நாட்டை விட்டும் தப்பிச் சென்றார்.



