
பொதுஜன பெரமுனவின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என – அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எழுத்து மூலம் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனைகளை – கட்சி ஏற்றுக்கொண்டுள்ள பின்னணியில், ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் உறுப்பினர் எவரேனும் தன்னை முன்னிறுத்தினால் அல்லது கட்சியால் முன்வைக்கப்படும் வேட்பாளருக்கு எதிராக செயற்பட்டால், கட்சியில் அந்த உறுப்பினர் எந்த பதவியை வகித்தாலும் – அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தவிர, வேறு எந்த வேட்பாளரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கும் அல்லது கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு கட்சி உறுப்பினருக்கும் இது பொருந்தும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



