
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இரண்டு மாடிகளைக் கொண்ட (மூன்று தளங்கள்) புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, அங்கு வைத்தியசாலை இயங்கி வருகின்ற போதும், குறித்த கட்டடத்துக்கான மின்தூக்கி (லிப்ட்) இதுவரை பொருத்தப்படாமையினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
வைத்தியசாலையின் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த – ஆண் மற்றும் பெண் நோயாளர்களுக்கான வார்டுகள், தற்போது புதிய கட்டடத்தின் முதல் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோயாளர்களும், நோயாளர்களை காவிச் செல்பவர்களும் – படிக்கட்டு வழியாகவே சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
குறித்த கட்டடத்தில் மின்தூக்கி (லிப்ட்) பொருத்துவதற்கான கதவுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அங்கு மின்தூக்கி பொருத்தப்படவில்லை.
10 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையில் இந்தக் கட்டடம் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்டதோடு, அதன் பின்னரும் பல கோடி ரூபாய்கள் இந்தக் கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்டது.
இந்தக் கட்டடித்தில் மின்தூக்கி (லிப்ட்) பொருத்தப்படாமை உள்ளிட்ட – மேலும் பல குறைபாடுகளும் இருக்கத்தக்கதாக, இதனைத் திறந்து வைக்கும் பொருட்டு, கடந்த வருடம் நொவம்பர் மாதம் 19ஆம் திகதி, கிழக்கு மாகாண ஆளுநர் வருகை தரவிருந்தார். ஆனாலும் அதற்கு எதிராக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
வைத்தியசாலைக் கட்டடத்திலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து விட்டு – அதனைத் திறந்து வைக்குமாறு, இதன்போது மக்கள் கோஷமெழுப்பினர். அதனையடுத்து அந்தக் கட்டடத்தை அளுநர் திறந்து வைக்கும் நிகழ்வு கைவிடப்பட்டது.
ஆயினும், அடுத்த வாரத்தில் குறித்த வைத்தியசாலைக் கட்டடம் அவசர அவசரமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கட்டடத்துக்கு முன்தூக்கி (லிப்ட்) பொருத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், குறித்த கட்டடத்தில் மின்தூக்கி பொருத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படியென்றால், குறித்த கட்டடம் முழுமையாக நிறைவுசெய்யப்படாத நிலையில் அதனை யார் பொறுப்போற்றது?
ஒரு கட்டடம் நிறைவுசெய்யபப்படாமலுள்ள போது – ஏன் அது பொறுப்பேற்கப்பட்டது?
நிறைவு செய்யப்படாத ஒரு கட்டடம் – மக்களின் ஆர்ப்பாட்டத்தையும் மீறி, அவசர அவசரமாக ஏன் திறந்து வைக்கப்பட்டது?
இவ்வாறு இந்தக் கட்டடம் தொடர்பில் எழுந்துள்ள மேற்படி கேள்விகளுக்கான விடைகள் உள்ளிட்ட பல தகவல்களை – விரைவில் ‘புதிது’ செய்தித்தளம் வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

தொடர்பான செய்திகள்:



