அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

🕔 November 19, 2023

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு, பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது.

வைத்தியசாலைக்கு முன்பாக – மக்கள் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் ஆளுநர் – நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வருகை தந்த போது, அவரின் வாகனத்தை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், புதிய கட்டடத்தில் நிலவும் குறைகள் பற்றிக் கூறினர். இதனைச் செவிமடுத்த அவர், புதிய கட்டடத்தில் இவ்வாறான குறைகள் இருக்கின்றமை தொடர்பாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் – தனக்கு ஒருபோதும் தெரியப்படுத்தவில்லை என்றார். ஆயினும் வைத்தியசாலை வாயிலின் முன்பாக வைத்து, அவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பியனுப்பினர்.

இந்த நிலையில் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வந்திருந்த கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் – ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டு வெளியேறிச் செல்ல முடியாத நிலையில், பொலிஸ் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத்துக்கான தேவைகள் பூரணப்படுத்தப்படாத நிலையில், அந்தக் கட்டத்தை இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் திறந்து வைப்பதற்கான நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது.

ஆயினும் கட்டடத்திலுள்ள குறைபாடுகளும் தேவைகளும் நிறைவு செய்யப்படாமல் அதனைத் திறந்து வைக்க வேண்டாம் என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் றிபாஸிடம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கூறிய போதும், குறித்த திறப்பு விழா நடந்தே தீரும் என அவர் தெரிவித்திருந்தார்.

இதனால், வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் இடையில், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் சிலர் வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, குறித்த திறப்பு விழாவை நடத்த விடுவதில்லை எனத் தீர்மானித்த பொதுமக்கள், இன்று காலை வைத்தியசாலையின் சுற்றயல் முழுவதும் கறுப்புக் கொடிகளை கட்டியதுடன், ‘கிழக்கு ஆளுநரே, அட்டாளைச்சேனை வைத்திசாலையின் பூரணப்படுத்தப்படாத கட்டடத் திறப்பு விழாவை நிறுத்து’ எனும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளையும் ஆங்காங்கே காட்சிப் படுத்தியிருந்தனர்.

இருந்தபோதும் குறித்த விழாவை நடத்தி முடிக்கும் நோக்கத்தில் வைத்தியசாலையைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆயினும் பொதுமக்கள் – கறுப்புக் கொடிகளையும், பதாதைகளையும் ஏந்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து, குறித்த நிகழ்வுக்கு ஆளுநர் வருகை தரவில்லை. இதனால் விழா ரத்தானது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரின் வானத்தை மறிக்கும் பொது மக்கள்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் – கட்டடத்திலுள்ள குறைகளை ஆர்ப்பாட்டக்காரர் விவரிக்கின்றார்

தொடர்பான செய்தி: ‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்