
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டி இல்லாமல் இயங்குவதைச் சுட்டிக்காட்டி நேற்று (24) ‘புதிது’ செய்தித்தளம் செய்தி வெளியிட்டமையை அடுத்து, அங்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸடீன் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் – இன்று (25) காலை வைத்தியசாலைக்கு வருகை தந்து, மருந்துக் களஞ்சியத்தைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டியின்றி நீண்ட காலமாக இயங்கி வருகின்றமை குறித்து நேற்றைய தினம் ‘புதிது’ செய்தித்தளம் படங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தது.
குளிரூட்டியின்றி களஞ்சியப்படுத்தப்படும் மருந்துகள் வீரியம் இழப்பதோடு, பழுதடையும் சாத்தியங்கள் உள்ளமை பற்றியும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அவ்வாறான மருந்துகளை நோயாளர்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்பதையும் ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டியிருந்தது.
எனவே, அட்டாளைச்சேனை வைத்தியசாலைசாலையில் காணப்படும் மேற்படி குறைபாட்டை சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் உடனடிக் கவனமெடுத்து, களத்துக்கு வருகை தந்து – அது தொடர்பில் ஆராய்ந்த கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம், அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்துக்கு குளிரூட்டியை ‘தாமதமின்றி’ பொருத்த வேண்டுமென்பதையும் – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நினைவுபடுத்துகிறோம்.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் குளிரூட்டி இல்லாத மருந்துக் களஞ்சியம்; பலமுறை அறிவித்தும் கணக்கெடுக்காத பிராந்தியப் பணிப்பாளர் காரியாயலம்



