கோட்டாவின் ‘பாவத்துக்கு’ மன்னிப்புக் கோர, அமைச்சரவை அனுமதி

🕔 July 23, 2024

கொவிட் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நடைமுறையை அமுல்படுத்தியமையினால் – பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரிடமும், அரசாங்கம் சார்பில் மன்னிப்பு கேட்பதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறந்த நபரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்யும் முறைமையை, இறந்தவர்களின் உறவினர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கொவிட்-19 காரணமாக இறந்த நபர்களின் உடல்களை அகற்றுவதற்கான ஒரு முறையாக தகனம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் கொரோனா காரணமாக இறந்தவர்களில் மொத்தம் 276 பேர் தகனம் செய்யப்பட்டனர், பின்னர் 2021ஆம் ஆண்டு பெப்ரவரியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, கொவிட் பெருந்தொற்று காரணமாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தகனக் கொள்கையின் விளைவாக – பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களிடத்திலும் அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்பு கோருவதற்காக நீதி, வெளியுறவு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்கள் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அன்றைய கட்டாய தகனம் கொள்கை பல்வேறு மதக் குழுக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக முஸ்லிம் சமூகம் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்படுத்தியிருந்ததையும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், கொரோனா காரணமாக இறந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்யும் நடவடிக்கை, முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கும் விதமாகக் மேற்கொள்ளப்பட்டதாக, பல்வேறு தரப்புகளிலிருந்தும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கொரோனாவினால் மரணித்தவர்களின் உடல்களை புதைத்தால், நிலக்கீழ் நீர் நீரில் கொரோனா வைரஸ் பரவும் என – கோட்டா அரசாங்கத்தில் கூறப்பட்டு, கட்டாய தகனம் அமுல்படுத்தப்பட்டது.

ஆனால், கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதன் காரணமாக, நிலக்கீழ் நீரில் வைரஸ் பரவாது என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்