ஈரான் ஜனாதிபதி தேர்தலில், மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என அறிவித்துள்ள, டொக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி

🕔 July 6, 2024

ரானின் புதிய ஜனாதிபதியாக டொக்டர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எண்ணப்பட்ட 03 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சயீத் ஜலீலியை 44.3% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜூன் 28 அன்று நடந்த முதல் சுற்று வாக்களிப்பில், எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத நிலையில் – இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தது.

ஈரானின் ஜனாபதிபதியாகப் பதவி வகித்த இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமையை அடுத்து – புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 71 வயதான டொக்டர் மசூத் பெசெஷ்கியன், இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதோடு – ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டொக்டர் மசூத் பெசெஷ்கியன் – ஈரானின் ‘அறநெறி பொலிஸ்’ பிரிவை விமர்சித்து பிரசாரம் செய்ததோடு, உலகத்திலிருந்து ஈரானின் ‘தனிமைப்படுத்தலுக்கு’ முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ‘ஒற்றுமை மற்றும் ஒத்திசைவு’ பண்புகளை மேம்படுத்துவதற்கும் உறுதியளித்திருந்தார்.

மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தளர்த்துவதற்கு ஈடாக, ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதாக ஒப்புக்கொண்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் தொடர்பாக, மேற்கத்திய சக்திகளுடன் ‘ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு’ டொக்டர் மசூத் பெசெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட சயீத் ஜலீலி, ஈரானின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு ஆதரவானவர். முன்னாள் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஜலிலி, ஈரானின் பெரும்பாலான மத சமூகங்கள் மத்தியில் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்