லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல்

🕔 June 15, 2024
பொறியலாளர் ஆக்கில்

க்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம், லஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றிவரும் பொறியியலாளர் ஆக்கில் என்பவர், தன்னிடம் 04 லட்சம் ரூபாய் லஞ்சம் கோருவதாக – ஆக்கரைப்பற்றிலுள்ள கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவர், கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான புதன்கிழமை (12), அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நீர்பாசன திணைக்களக் காரியாலயத்தில் வைத்து, நீர்ப்பாசன பொறியியலாளர் கூறியமைக்கு அமைவாக அவரின் வாகன சாரதியிடம், லஞ்சப் பணத்தில் ஒரு பகுதியாக 02 லட்சம் ரூபாயை – கனரக வாகனங்களின் உரிமையாளர் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் – பொறியியலாளரையும் அவரின் சாரதியையும் கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (13) முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, அவர்களை விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வயல் வெளிகளிலிருந்து மண்ணை ஏற்றிக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கும் பொருட்டு, குறித்த கனரக வாகனங்களின் உரிமையாளரிடம் மேற்படி பொறியியலாளர் லஞ்சம் கோரியதாக தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்