13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக கூறிய சஜித் பிரேமதாசவுக்கு கண்டனம்

🕔 June 11, 2024

ரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களே அதனை முழுமையாக அமுல்படுத்த முன்மொழிகின்றனர் என, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை அமுல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி விரும்பினால், அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விபரித்துள்ளார்.

தாம் ஆட்சிக்கு வந்தால் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கிளிநொச்சியில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கையை உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக சஜித் கூறியுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள உதய கம்மன்பில, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது – எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் நிலைவரம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிந்திருந்தால், 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உறுதியளித்திருக்க மாட்டார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்