காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு

🕔 June 9, 2024
தாக்குதலுக்குள்ளான நுசிரத் அகதிகள் முகாம்

காஸாவிலுள்ள நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நேற்று (08) சனிக்கிழமை நடத்திய தாக்குதலை ‘ஒரு படுகொலை’ என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளதோடு, 698 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என, காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நுசிரத் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் பணயக் கைதிகளாக வைத்திருந்த நான்கு இஸ்ரேலியர்களை மீட்டுள்ளதாக, இஸ்ரேலியப் படைகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

நுசிரத் நடவடிக்கையின் போது – தமது வசமிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றதாக ஹமாஸின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

தங்கள் மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக – அகதிகள் முகாமில் உள்ள ராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறியே இஸ்ரேலியப் படைகள் பகலில் சோதனையை ஆரம்பித்திருந்தன. ஆனால் குடியிருப்பு கட்டிடங்களை குண்டுவீசித் தாக்கியதால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

அது ஒரு திகில் படம் போன்று இருந்ததாக தாக்குதலை நேரில் பார்த்த வைத்தியர் ஒருவர் கூறியதாகவும், “இஸ்ரேலிய ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் இரவு முழுவதும் மக்களின் வீடுகளை நோக்கி சுட்டன” என்றும் தெரிவித்தார் எனவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தெருவில் நடமாடும் அனைவரும் கொல்லப்பட்டனர்” என்று சம்பவத்தைக் கண்ட சாட்சியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

உதவிப் பொருட்கள் மற்றும் தளபாடங்கள் ஏற்றப்பட்ட டிரக்குகளைப் பயன்படுத்தி இஸ்ரேலிய படையினர் – நுசிரத்துக்கு வந்ததாக அல் ஜசீராவிடம் சாட்சிகள் இருவர் கூறியுள்ளனர். ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இதேவேளை அமெரிக்கா நிர்மாணித்த கப்பல் துறைமுகம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் இதனை மறுத்துள்ளது.

இது இவ்வாறிருக்க இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அழைத்துச் செல்லப்பட்ட அல்-அக்ஸா மருத்துவமனை, ‘படுகொலைக் கூடமாக’ மாறியிருந்ததாகவும் – எல்லா இடங்களிலும் இரத்த வெள்ளத்தில் குழந்தைகள் உட்பட நோயாளிகள் கிடந்ததாகவும், எல்லைகளற்ற வைத்தியர்களின் அமைப்பைச் சேர்ந்த டொக்டர் தன்யா ஹஜ்-ஹசன் தெரிவித்துள்ளார்.

அல் – அக்ஸா வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்