இலங்கை மின்சார சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

🕔 June 4, 2024

த்தேச ‘இலங்கை மின்சார சட்டமூலத்தின்’ பல சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சரத்துகள் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், ஒரு சரத்து – சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத் தீர்மானம் கூறுகிறது என்று சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சட்டமூலம் திருத்தப்பட்டால், இந்த சரத்துகளை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை கடந்த மே மாதம் 09ஆம் திகதி விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஆரம்பமானது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, நுகர்வோருக்கு வசதியான சேவையை வழங்கும் அதே வேளையில் – மின்சார உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதே இந்த சட்டமூலத்தின் நோக்கம் என்று தெரிவித்திருந்தார்.

சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் உள்ளிட்ட 14 தரப்பினர் உட்பட மனுதாரர்கள் சார்பில் – சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை முடித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், தனது உறுதிமொழியை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ரகசியமாகத் தெரிவிக்கும் என்று மே 13ஆம் திகதி அறிவித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்