கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

🕔 June 3, 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்களை தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரக்குறைவான இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வழக்கின் நான்காவது சந்தேக நபரை 01 லட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 05 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி – தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை, மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தின் இறக்குமதி மூலம் 130 மில்லியன் ரூபாய் மோசடியாக வருமானம் எட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில், ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு – விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்