பலஸ்தீனத்துக்காக துணிச்சலுடன் செயலாற்றியவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாதது: ஈரான் ஜனாதிபதியின் இறப்பு குறித்து றிஷாட் பதியுதீன் கவலை

🕔 May 20, 2024

லஸ்தீன மண்ணுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் துணிச்சலுடன் அளப்பெரிய செயலாற்றிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதில், முன்னின்று உழைத்த, துணிச்சல் மிக்க முன்னணி அரசியல் தலைவராக இப்றாகிம் ரைசி விளங்கினார் எனவும் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தப்ரிஸ் மஸ்ஜிதின் இமாம் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகொப்டர் விபத்துகுள்ளாகி பலியான துயரச் சம்பவம் தொடர்பில் றிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

‘இந்த எதிர்பாராத துயரச் சம்பவம் ஈரான் மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரைசி, அர்ப்பணிப்புள்ள இரக்கம் கொண்ட   தலைவராக இருந்தார். ஈரான் மற்றும் இஸ்லாமிய உலகின் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்தவர். ஈரானின் அரசியல், சமூக மற்றும் மத விவகாரங்களில் அவரின் பங்களிப்புகள் தலைமுறை தலைமுறையாக  நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.

மேலும், பாலஸ்தீன மண்ணுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் துணிச்சலுடன் செயலாற்றியதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் பங்களிப்பு அளப்பரியது. சுதந்திர பலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதில், முன்னின்று உழைத்த, துணிச்சல் மிக்க முன்னணி அரசியல் தலைவராக -அவர் விளங்கினார்.

அதேபோன்று, இலங்கையானது ஈரானின்  மனிதாபிமான உதவிகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பெற்றுள்ளது. எங்களுக்கு தேவைகளும், பொருளாதார பிரச்சினைகளும் ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த உதவிகளை நாம் இன்றும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். இரு நாடுகளுக்குமிடையிலான உறவு எந்த சந்தர்ப்பத்திலும் வலுப்பெறும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்.  .

இந்த துக்ககரமான தருணத்தில், எமது பிரார்த்தனைகள் – விபத்தில் மரணித்தவர்களுக்கும் அவர்களின்   உறவுகளுக்கும் மற்றும் ஈரான் மக்களுக்கும் என்றுமே இருக்கும். மரணித்தவர்களுக்கு – எல்லாம் வல்ல அல்லாஹ், ‘ஜன்னத்துல் பிர்தௌஸ்’ எனும் உயர்மிகு சுவனத்தை வழங்கவும், அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு இந்த பேரிழப்பைத் தாங்கும் வலிமையையும் பொறுமையையும் வழங்க வேண்டுமெனவும்  பிரார்த்திக்கிறோம்’ என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள றிசாட் பதியுதீன்; ‘எந்தவொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்’ என்ற நியதியின் படி, இந்த இழப்பையும் பொறுத்துக்கொண்டு ஆறுதல் அடைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்