ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தகவல்

🕔 May 20, 2024

ரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரச ஊடகம் கூறியுள்ளது,

ஈரான் வெளியுறவு அமைச்சரும் அந்த ஹெலிகாப்டரில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் நீடிப்பதாக ஈரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி கூறியுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ரைசி சென்ற ஹெலிகொப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஒன்று முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் யாரும் உயிர் பிழைத்திருக்கும் அறிகுறி இல்லை என்றும் அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் ஜனாதிபதி இலாம் அலியேவுடன் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

ஈரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகொப்டர் தரையில் மோதியுள்ளது.

63 வயதான இப்றாஹம் ரைசி 2021ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்