க.பொ.த சாதாரண தர ஆங்கில வினாத்தாளை படம் பிடித்து, ‘வாட்ஸ்அப்’இல் பகிந்த டியூஷன் ஆசிரியர் கைது

🕔 May 12, 2024

ற்போது நடைபெற்றக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் – ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், டியூஷன் வகுப்பு ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’ இல் பகிரப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை – குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (12) காலை கண்டியில் வைத்து கைது செய்துள்ளனர்.

வினாத்தாள் பகிரப்பட்ட ‘வாட்ஸ்அப்’ குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

க.பொ.த. சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாள் இம்மாதம் 09ஆம் திகதி நடைபெற்றது. அட்டவணைப்படி காலை 8.30 மணியளவில் வினாத்தாள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. எனினும், குறித்த ஆசிரியர் அதனை புகைப்படம் எடுத்து – அதே நாள் காலை 9.11 மணியளவில் ‘வாட்ஸ்’அப் குழுவில் வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்தப் பின்னணியில், நடைபெற்று வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் போது, ஒரு சில முறைகேடுகள் பதிவாகியிருந்த போதிலும், ‘வினாத்தாள் கசிவு’ இடம்பெறவில்லை என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை தனக்கு கிடைத்த தகவல்களின்படி, பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள்கள் புழக்கத்தில் இருந்ததாக, எந்த தகவலும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

இம்மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, இம் மாதம் 15 வரை நடைபெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்