பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளை, ‘அதான்’ தவிர்ந்த விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு

🕔 April 5, 2024

நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் அதானுக்கு (தொழுகைக்கான அழைப்பு) மேலதிகமாக, ஏனைய சமயம்சார் விடயங்களுக்கு பள்ளிவாசலின் வெளியில் உள்ள ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிவாசல்களின் சுற்றுச் குழுவில் உள்ளவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக தொலைபேசி மூலமும் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் அமைச்சுக்கு ஊடாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையினை அடுத்து, இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸல் கையெழுத்திட்டு, இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை வக்பு சபையின் கடந்த முதலாம் திகதிய அமர்வின் போதும் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிவாசலின் நிருவாகிகள் அந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என, வக்பு சபை – தமக்கு அறிவித்துள்ளதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வக்பு சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;

  1. பள்ளிவாசலுக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை – அதானுக்கும் அவசியம் ஏற்படின், வழமைபோன்று அறிவித்தல்களுக்கும் பயன்படுத்த முடியும்.
  2. சுற்றுச் சூழலை கவனத்திற் கொண்டு, பள்ளிவாசல்களின் உள்ளக ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதுடன், விசேடமாக ரமழான் மாத இரவு வணக்கங்களின்போது, அயலில் உள்ளவர்களுக்கு இடையூறுகள் ஏற்படாத கையில் உள்ளக ஒலிபெருக்கிகளின் சத்தப் பாவனை தொடர்பாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
  3. ரமழான் மாத இரவு நேர வணக்க வழிபாடுகளின்போது, வாகன இட நெரிசல்கள் மற்றும் பாதையில் செல்வோருக்கு எதுவித இடையூறுகளும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

இந்த உத்தரவினையும் மீறி செயற்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில், பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு முறையிடலாம்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்: 0112667909, பணிப்பாளர்: 0112669994, உதவிப் பணிப்பாளர் (சமயம்): 0112669968

Comments

புதிது பேஸ்புக் பக்கம்