ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு

🕔 March 18, 2024

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக – விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, ஏப்ரல் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் வரை, விளையாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் ஒத்திவைக்குமாறும், மாணவர்களின் உடல்நலம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் அந்தந்த பாடசாலைகளின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு, பாடசாலை அதிபர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை (17) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் நிலவும் வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் – பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டு விடுமுறையின் பின்னரும் முதல் பாடசாலை தவணை தொடரும் என்பதால், அக்காலப்பகுதியில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளை நடத்த முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமேல், வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்