முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம்

🕔 February 29, 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியில் இருந்து வெளியேறிய பின்னரும் கொழும்பு 07 பேஜெட் வீதியிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) ரத்து செய்துள்ளது.

அதன்படி 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதி இது தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்ற வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பைக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை பரிசீலித்ததன் பின்னர், நீதியரசர்களான காமினி அமரசேகர மற்றும் குமுதினி விக்கிரமசிங்க ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தனவினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அமைச்சரவைத் தலைவர் எனும் வகையில் தனது சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளைப் பயன்படுத்தி எடுத்த தீர்மானங்கள் மூலம் – பொதுமக்களின் பல அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்ட போது – ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருந்தமையால், அவர் எடுத்த அமைச்சரவை தீர்மானம் உண்மையில் சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டினார்.

குறித்த குடியிருப்பு நாட்டிற்கு பெரும் நிதிப் பெறுமதி வாய்ந்தது எனவும், இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான இத்தகைய ஒதுக்கீடு பகுத்தறிவற்றது, சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது எனவும், மேலும் பல அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் – நாட்டு மக்களின் சமத்துவத்திற்கான உரிமை இது மீறியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்