முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும்

🕔 February 21, 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் – அந்தப் பல்கலைக்கழகத்தினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு இன்று (21) – தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருடங்களாகின்றன. அதன் முதலாவது உபவேந்தராக எம்.எல்.ஏ. காதர் நியமிக்கப்பட்டார்.

அந்தவகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிச் சென்ற உபவேந்தர்களில் – மிகவும் நினைவு கூறத்தக்கவராக முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் எம்.எல். ஏ. காதர் உள்ளார்.

தற்போது முன்னாள் உபவேந்தர் காதர் சுகயீனமுற்ற நிலையில், இன்றைய தினம் அவரை தென்கிழக்குப் பல்கலைகழகம் உணர்வுபூர்வமாகக் கௌரவித்தது.

பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடாதிபதிகள், நூலகர், பதில் நிதியாளர் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர் திரண்டிருந்தனர்.

நிகழ்வின்போது உபவேந்தர் றமீஸ் அபூபக்கர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் மற்றும் கலை கலாச்சார பீட அரசியல்துறையின் தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் ஆகியோர், முன்னாள் உபவேந்தரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அத்துடன் சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் எம்.எம். பாஸில், நூலகர் எம்.எம். றிபாஉடீன், கலாநிதி எம். அப்துல் ஜப்பார், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் கல்விசார ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.எம். காமில் உள்ளிட்டோர், முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் எம்.எல். ஏ. காதர் பற்றிய நினைவுகளை மீட்டி உரையாற்றினர்.

(தென்கிழக்குப் பல்லைக்கழக ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்