நாடாளுமன்றம் ஏப்ரலில் கலைகிறது: பொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் தீர்மானம்

🕔 February 19, 2024

நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் கலைத்து, பொதுத் தேர்தலுக்குச் செல்ல – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ஜூலை நடுப்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் அரச புலனாய்வுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதேபோல் தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் தனது நெருங்கிய சகாக்களைப் பணித்துள்ளார். எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு வருவோரை ஏற்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியிலிருந்து அரசியல்வாதிகளைக் கொண்டுவரும் செயற்பாட்டின் முதல் அம்சமாக, சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் எம்.பி. ரவி கருணாநாயக்கவின் கொழும்பு இல்லத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் உட்பட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதில் ஜனாதிபதி ரணில் கலந்துகொண்டு அரசியல் நிலைமைகளை விளக்கியுளளார்.

இதற்கிடையில் ஜனாதிபதி ரணில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியொன்றை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்கவுள்ளதால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் ஏற்கனவே ரணிலுக்கான தமது ஆதரவைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு’ என்ற கோசத்தை முன்வைத்து, பொதுத் தேர்தலில் வாக்குக் கோர ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது என, ‘தமிழன்’ இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்