பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு

🕔 February 12, 2024

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு பகிடிவதை குற்றத்தில் ஈடுபட்டமையை ஏற்றுக் கொண்ட 10 பட்டதாரிகளுக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை, கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கித் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் தற்போது நிர்வாக பதவிகளை வகிக்கின்றனர். அல்லது ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களால பகிடிவதைக்கு ஆளானவர் பட்டப்படிப்பை முடிக்காமல் ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது ஊருக்குத் திரும்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 550,000 ரூபாவை பாதிக்கப்பட்டவருக்கு வழங்குமாறு கண்டி பிரம நீதிமன்ற நீதவான் ஷிரினித் விஜேசேகர உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்படி பாதிக்கப்பட்டவருக்கு 5.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, மாணவிகள் முன்னிலையில் கடுமையாக பகிடிவதை செய்யப்பட்டு, தாக்கப்பட்டார். அடுத்த நாள், பல உணவுப் பொட்டலங்களை ஒன்றாகக் கலந்து, ஒரு மிருகம் சாப்பிடுவது போல் சாப்பிடும்படி பகிடிவத செய்தவர்கள் கட்டளையிட்டனர்.

இதன் பின்னர் – அவர் வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு – மூன்று புதியவர்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட வற்புறுத்தப்பட்டு, தாக்கப்பட்டார். மேலும் கூரையை கைளால் பிடித்து தொங்குமாறு வற்புறுத்தப்பட்டார்.

அந்த பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்ததாக பாதிக்கப்பட்டவர் பின்னர் கூறினார்.

காயங்கள் காரணமாக, அவர் இரண்டு தடவை பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பகிடிவதை செய்தவர்கள், கொலை மிரட்டல் விடுத்து, கீழே விழுந்ததில் காயங்கள் ஏற்பட்டதாக கூறுமாறு சொன்னதாக, அரசுத் தரப்புக்கு தலைமை தாங்கிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டாவது முறை, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் காயங்கள் குறித்து சந்தேகம் அடைந்தார், மேலும் பாதிக்கப்பட்டவரை விசாரித்ததில், பகிடிவதை காரணமாக காயங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மேற்படி நபர் – படிப்பை கைவிட்டு அவரின் ஊருக்குச் சென்றுவிட்டார்.

நீதிமன்றத்தல் தண்டனையினை அறிவித்த நீதவான் – குற்றம் குற்றவாளிகளை கடுமையாக எச்சரித்தார்.

1998 ஆம் ஆண்டின் 20,ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறைத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்