நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

🕔 February 9, 2024

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.

இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி நெல் ஆலை உரிமையாளர்கள், நெல்லை களஞ்சியப்படுத்தும் நபர்கள் மற்றும் நெல்லை சேகரிப்பவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலம் மானியக் கடன் அடிப்படையில் கடன் வழங்கி – நெல்லை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விலைகள் பின்வருமாறு,

14 சதவிகிதம் ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ நெல்லுக்கான விலை வருமாறு;

  • நாட்டரிசி   –  105 ரூபாய்
  • சம்பா   – 120 ரூபாய்
  • கீரி சம்பா   –  130 ரூபாய் 

14 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ நெல்லுக்கான விலை;

  • நாட்டரிசி   –  90 ரூபாய்
  • சம்பா   – 100 ரூபாய்
  • கீரி சம்பா   –  120 ரூபாய் 

இந்த நெல்லை கொள்வனவு செய்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபா கடனாகவும், நெல்லை களஞ்சியப்படுத்தும் நபர்கள் மற்றும் அரிசி சேகரிப்பாளர்களுக்கு 25 மில்லியன் ரூபாயை அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாகவும் அரசு வழங்கவுள்ளது.

இந்த கடன் திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இதன் கீழ் 2023/24 பெரும் போக நெல் அறுவடைகளை மட்டுமே கொள்வனவு செய்ய முடியும்.

அதன்படி நெல் கொள்முதலில் விவசாய திணைக்களத்தினால்  வழங்கப்படும்  விலைக்கே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

அத்துடன் இந்த நெல் கொள்வனவுக்கான மேற்பார்வை, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் – மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் இணைந்து செயற்படுத்தப்படுகின்றது.

அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்யும் போது விவசாயத் துறை, விவசாய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் துறையினரிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்