10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர்

🕔 February 7, 2024

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக – கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2014/2015ஆம் ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு, 10 வருடங்களின் பின்னர் பட்டம் வழங்கப்படவுள்ள நிலையில், இந்தக் கால தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழகம் சார்பில் மன்னிப்புக் கோருவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா – எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (06) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் எழுப்பிய கேள்யொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, உபவேந்தர் ரமீஸ் – குறித்த மாணவர்களிடம் மன்னிப்புக் கோருவதாக கூறினார்.

“இந்தப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2014/2015 ஆம் ஆண்டில் சுமார் 2500 பேர் பதிவு செய்தனர்.

மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டிய அவர்களின் அந்தப் பட்டப்படிப்பு, 10 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது.

இந்த நிலையில் 16ஆவது பட்டமளிப்பு விழாவில் மேற்படி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இலங்கையில் 45 வயதுக்குள்தான் ஒருவர் அரச உத்தியோகம் ஒன்றைப் பெறமுடியும். ஆனால், ஒரு பட்டப்படிப்புக்கு 10 ஆண்டுகளை நீங்கள் இழுத்தடித்தமையினால், 45 வயது தாண்டிய நிலையில், அரச உத்தியோகம் ஒன்றைப் பெற முடியாதவர்களாக மேற்படி மாணவர்களில் பலர் பட்டங்களைப் பெறவுள்ளனர். இவர்களுக்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள்” என, ஊடகவியலாளர் மப்றூக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்; “ஈஸ்டர் தின தாக்குதல் மற்றும் கொரோனா போன்ற விடயங்களால் அந்த மாணவர்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்வதில் காலதாமதமாகி விட்டது. அதற்காக பல்கலைக்கழகம் சார்பாக நாங்கள் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான சில காரணங்களால் இந்தத் தாமதம் நிகழ்ந்து விட்டது.

ஆனால் இனி அவ்வாறு நடக்காது. வெளிவாரி பட்டப்படிப்பு நிலையத்தின் தற்போதைய பணிப்பாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் – உரிய காலங்களில் படிப்புகளை முடிக்க வேண்டும் என்பதில் செயற்பட்டு வருகின்றார்.

குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டப்படிப்புகளை – இனி நிறைவு செய்ய வேண்டும் என, அவரிடம் நான் கூறியிருக்கிறேன்.

இவ்வாறான காலதாமதங்கள் எமது பல்கலைக்கழகத்தின் பெயருக்கும் புகழுக்கும் இழுக்கை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக – கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வற்காக 2014/2015ஆம் ஆண்டு பதிவுகள் நடைபெற்ற போது, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக எம்.எம். நாஜிம் பதவி வகித்தார். 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில்தான் உபவேந்தர் பதவியிலிருந்து நாஜிம் விலகிச் சென்றார்.

21 ஜுன் 2021ஆம் ஆண்டுதான் – தென்கிகழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் ரமீஸ் அபூபக்கர் பதவியேற்றார்.

ஆனால், 2014/2015ஆம் ஆண்டு கலைமாணி பட்டப்படிப்புக்காக வெளிவாரியாக பதிவு செய்தவர்களின் முதலாமாண்டு – முதல் பருவத்துக்கான பரீட்சை முடிவு 2018ஆண்டுதான் வெளியாகியது. அதாவது 06 பருவங்களைக் கொண்ட 03 வருங்களுக்குரிய மேற்பபடி பட்டப் படிப்பின் ஒரு பருவத்தை நிறைவு செய்வதற்கே, 04 வருடங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த 04 வருடங்களிலும் ஈஸ்டர் தாக்குதல் அல்லது கொரோனா போன்ற எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

இவர்களின் இந்தப் பட்டப்படிப்பு – இவ்வாறு இழுத்தடிப்புச் செய்யப்பட்டமைக்கு, முன்னாள் உபவேந்தர் எம்.எம். நாஜிம்தான் பிரதான காரணமாக இருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே, 2014/2015ஆம் ஆண்டுக்குரிய மேற்படி பட்டப்படிப்புக்காக பதிவு செய்தவர்களின் படிப்புக் காலம் 10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டமைக்கு – ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா போன்றவை காரணமாக இருந்தன என்பதில் முழுமையான உண்மைகள் இல்லை.

வெளிவாரியாக பட்டப்படிப்பை மேற்கொள்கின்றவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள், தொழில் செய்து கொண்டே படிப்பவர்கள், குடும்பத்துக்காக உழைப்பவர்களாவர்களாவர்.

அந்தவகையில் 2014/2015ஆம் ஆண்டு வெளிவாரியாக கலைமாணி பட்டப்படிப்புக்காக பதிவுசெய்த சுமார் 2500 பேரில் பலர் – பட்டப்படிப்புக் காலம் இழுத்தடிக்கப்பட்டமையினால் தமது படிப்பை – இடையில் கைவிட்டுச் சென்று விட்டார்கள்.

இன்னும் பலர் – இந்தப் படிப்புக் காலம் இழுத்தடிக்கப்பட்டமையினால் அதற்குரிய பரீட்சைகளில் வெற்றிகரமான முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவ்வாறான நிலையில்தான் மேற்படி 2500 மாணவர்களில் 644 மாணவர்கள் மட்டுமே, எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் தமக்குரிய பட்டங்களைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

அதிலும் சிலர் 10 வருடங்கள் தமது படிப்பு இழுத்தடிக்கப்பட்டமைக்கு – தங்கள் எதிர்ப்பை வெளியிடும் வகையில், பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதென்றும், அந்த விழாவில் பங்கேற்று தமது பட்டங்களைப் பெறுவதில்லை எனவும் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்