வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

🕔 January 15, 2024

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் பரிசோதனை உபகரணங்களை அதிக விலைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2020 முதல் 2022 வரை சுகாதார அமைச்சராக இருந்த (நுயென் தன் லாங் (Nguyen Thanh Long) 25 மில்லியன் டொலர் (இலங்கைப் பெறுமதியில் 806 கோடி ரூபாய்) லஞ்சம் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

வைத்தியசாலைகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு கொவிட் சோதனை உபகரணங்களை அதிக விலைக்கு வழங்குவதற்கு அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் பல மில்லியன் டொலர் ஒப்பந்தங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கிலேயே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் ஆரம்பத்தில் கொவிட் தொற்றுநோயை திறம்பட கையாண்டு வந்தது. ஆனால், கொவிட் பரிசோதனை கருவிகளை வழங்கிய நிறுவனங்களிடம் அரச அதிகாரிகள் பணம் பெறத் தொடங்கினர்.

இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் – பத்து நாள் விசாரணைக்குப் பிறகு, 38 பிரதிவாதிகளில் அனைவரும் – லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சில குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்