உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல்

🕔 January 14, 2024

டைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் பகுதி I மற்றும் பகுதி II வினாத்தாள்களின் கேள்விகள் – பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படுகின்றமை தொடர்பாக அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் க.பொ.த உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியர் ஒருவரை – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தமையை அடுத்து, அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆண் ஆசிரியர் – உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் நடத்துகிறார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

சந்தேக நபரின் சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட 2023 உயர்தரப் பரீட்சைக்கான விவசாய விஞ்ஞானப் பாடத்துக்கான பகுதி I மற்றும் பகுதி II வினாத்தாள்களை, அவரின் வீட்டில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விவசாய விஞ்ஞானம் I வினாத்தாளை ஜனவரி 08ஆம் திகதியும், விவசாய விஞ்ஞானம் II வினாத்தாளை ஜனவரி 10ஆம் திகதியும் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து, அவரை 2024 ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அம்பாறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் I மற்றும் II வினாத்தாள்களின் பல கேள்விகள், பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானதை அடுத்து, குறித்த பரீட்சையை ரத்துச் செய்வதாக வெள்ளிக்கிழமை (12) பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.

ஜனவரி 10 ஆம் திகதி குறித்த பாடத்துக்கான பரீட்சை நடைபெற்றது.

ரத்துச் செய்யப்பட்ட பரீட்சைகளுக்கான மாற்றுப் பரீட்டை நடைபெறும் திகதியை, பரீட்சைத் திணைக்களம் பின்னர் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்