கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு

🕔 January 9, 2024

கியூபா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை ஐந்து மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 25 பெசோ (peso) வில் இருந்து 132 பெசோவாக உயரும் என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கைப் பெறுமதியில் 336 ரூபாவுக்கு கியூபா விற்கப்படும் ஒரு லீட்டர் பெற்றோல், 1774 ரூபாவுக்கு விற்கப்படவுள்ளது. (இலங்கையில் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 366 ரூபாய்)

பணவசதி இல்லாத கியூபா மக்களின் வாழ்க்கையை – மிகவும் கடினமாக்கும் சமீபத்திய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

டீசல் மற்றும் பிற வகை எரிபொருள்களின் விலைகளும் இதே போன்ற விலை அதிகரிப்புகளை எதிர்கொள்ளும் என்று நிதியமைச்சர் விளாடிமிர் ரெக்யூரோ கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் கியூபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய், சமீபத்திய ஆண்டுகளில் விதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டவை இந்த நிலைமைக்கு காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கியூபாவின் பொருளாதார அமைச்சர் அலெஜான்ட்ரோ கில் கடந்த மாதம் கூறுகையில்; கியூபா அரசாங்கம் இனி மானிய விலையில் எரிபொருளை வழங்காது என்றார். மேலும், இது “உலகிலேயே மலிவானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் பொருளாதார பேராசிரியர் ஒமர் எவர்லெனி பெரெஸ் இது குறித்து – ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; “கியூபாவில் பெட்ரோல் உலகளாவிய தரத்தின்படி மலிவானதாக இருக்கலாம், ஆனல் நாட்டுச் சம்பளத்துடன் ஒப்பிடும்போது அது மிகவும் விலை உயர்ந்தது” என்றார்.

மேலும் புதிய விலைக் அதிகரிப்பு முழு சமூகத்தையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் கியூபா – கடந்த நான்கு ஆண்டுகளாக உணவு, மருந்து மற்றும் நுகர்வுப் பொருட்களின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்