எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு

🕔 December 13, 2023

ம்ஒபி (Muriate of Potash) உரத்தை விற்கக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று (12) நடைபெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

கலந்துரையாடலின் போது, 27,000 மெற்றிக் தொன் எம்ஒபி உரம் தற்போது அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களிடம் உள்ளதாகவும், யூரியா உரம் அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே, ஒரு மூடை யூரியா உரம் மற்றும் எம்ஒபி உரம் ஆகியவற்றை தலா 9000 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்ஒபி உரத்துக்காக அதிகபட்ச சில்லறை விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு தேசிய உர செயலக பணிப்பாளர் டொக்டர் ஜகத் பெரேராவுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.

இரண்டு உர நிறுவனங்களுக்கு மேலதிகமாக, இந்த பெரும் போகத்தில் தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் உயர்தர இயற்கை உரங்களை விவசாயிகள் அதிகம் கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர கரிம உரங்களைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பது மிகவும் நல்லதொரு போக்காகும் எனத் தெரிவித்த அமைச்சர், வெற்றிகரமான அறுவடைக்கு குறிப்பிட்ட சதவீதத்திற்கேற்ப கரிம உரங்கள் மற்றும் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்