“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

🕔 November 27, 2023

– மரைக்கார் –

பரத நாட்டியம் தொடர்பில் அருவருக்கத்தக்க கருத்துக்களை கூறி, முஸ்லிம் – தமிழ் சமூகங்களிடையே முறுகலையும் தேவையற்ற முரண்பாடுகளையும் அண்மையில் ஏற்படுத்திய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், ‘மத நல்லிணக்கம்’ தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள – மௌலவி ஹமீட் உரையாற்றும் வீடியோ ஒன்றில், “முஸ்லிம்களுக்கு மத நல்லிணக்கம் என்ற ஒன்று இல்லை” எனும் பொருள்பட பேசியுள்ளமை, தற்போது கடுமையான சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

பொங்கல், தீபாவளி நாட்களில் – அடுத்த மதத்தவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும் முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களைக் கூட, முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது என்றும், அவ்வாறான ‘நல்லிணக்கம்’ இஸ்லாத்தில் இல்லை எனவும், தனது உரையில் மௌலவி ஹமீட் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சாப்பாட்டுப் பொருள்களை அடுத்த சமூகத்தவர்கள் தந்தால்,’நாங்கள் முஸ்லிம்கள் அதைச் சாப்பிட மாட்டோம்’ என கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ள மௌலவி ஹமீட்; “நல்லிணக்கம் எனும் பெயரில் அவர்களிடம் போய் சாப்பிடுவதையும் பலகாரங்களைப் பரிமாறுவதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை” எனவும் கூறியுள்ளார்.

இவரின் இந்த உரையடங்கிய வீடியோவை – தற்போது முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதோடு, இது தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

அடுத்த சமூகத்தவர் அன்போடு வழங்கும் பலகாரங்களைக் கூட, சாப்பிடக்கூடாது என, இஸ்லாம் வெறுத்து ஒதுக்குகின்றதா? என, தமிழ் சகோதரர்கள் இவரின் உரையினை பார்த்து விட்டு கேள்வியெழுப்புகின்றனர்.

மேற்படி மௌலவி ஹமீட், பரத நாட்டியம் தொடர்பில் கீழ்தரமான கருத்தொன்றை அண்மையில் வெளியிட்டமையினால், முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இதனையடுத்து பிரச்சினையினைத் தீர்த்து வைக்கும் வகையில், அகில் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – சில நாட்களுக்கு முன்னர் இந்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு – ஊடக சந்திப்பொன்றினை நடத்தி, மௌலவி ஹமீட் தெரிவித்த கருத்துக்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் ஏற்படுத்திய சர்ச்சை ஓய்வதற்கு இடையில் – மௌலவி ஹமீட் மற்றொரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்