ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

🕔 November 26, 2023

வ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவான ‘உறுமய’ தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை அனுராதபுரம் நொச்சியாகமவில் இன்று (26) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களைக் கூறினார்.

ஷங்ரிலா ஹோட்டலுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்க முடியுமாயின், எமது நாட்டில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவதில் என்ன தவறு என ஜனாதிபதி இங்கு கேள்வி எழுப்பினார்.

ஷங்ரிலா அமைந்துள்ள காணியினால் இலங்கைக்கு அந்நியச் செலாவணி கிடைப்பதைப் போன்றே, நவீன விவசாயக் கைத்தொழில் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள விவசாயம் செய்யும் மக்களுக்கு இலவச காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதென்பது – அவர்களின் முன்னோர்களின் பாரம்பரியத்தை வழங்குவதாகவே இருக்கும் என்பதோடு, அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இருக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2024 வரவு செலவுத் திட்டத்தில் ‘உறுமய’ காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்காக இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் இலங்கையில் நிலங்களை கையகப்படுத்திய பின்னர், அந்த நிலங்களில் பயிரிடுவதற்கு பூர்வீக மக்களுக்கு உரிமம் வழங்கியிருந்தனர்.

ஆனால் 1935 ஆம் ஆண்டின் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் ஊடாக, உள்நாட்டவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு மற்றொரு அனுமதிப் பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. காணியை வைத்திருப்போருக்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளவும் வீடுகளை கட்டவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தின் உரிமையை மற்றவருக்கு மாற்றவோ விற்கவோ அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஜயபூமி, சௌமிய பூமி, ஸ்வர்ணபூமி, போன்ற அனைத்து காணி உறுதிகளுக்குப் பதிலாக, காணி உறுதிப்பத்திரம் வழங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்மொழிந்துள்ளார்.

இதன்படி, 2024ஆம் ஆண்டு முதல் – இந்த அனுமதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு ஜனாதிபதி மேலும் பேசுகையில்;

”இப்பிரதேச மக்களுக்கு காணி உரிமை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் இன்று இங்கு கூடியுள்ளனர். நாம் நாட்டுக்காக உழைக்க வேண்டும்.

நான் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது, நாடு வீழ்ச்சியடைந்திருந்தது. நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. அடுத்த மாதத்திற்குள் நம் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபடப் போகிறது. சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து தேவையான பதில் அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் போதாது. எங்களுக்கு நிறைவேற்றுவதற்கு இன்னும் பல பணிகள் இருக்கின்றன.

முன்பெல்லாம் ஒரு கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டியிருந்தது. நாங்கள் அவ்வாறான ஒரு குழுவுடன் இந்த பயணத்தை ஆரம்பித்தோம். அதில் நாம் அனைவரும் திருப்தியடையலாம். யாருடைய தவறு என்றாலும், நாங்கள் இப்போது எங்கள் பொறுப்பை நிறைவேற்றியுள்ளோம்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்காக, எமக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருந்தது. இப்போது வங்குரோத்து நிலை முடிந்துவிட்டதால், தடைப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் தொடங்க எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

அத்துடன், அனுராதபுரம் மாவட்டத்தில் மல்வத்து ஓயா மற்றும் மகா விகாரை போன்றவற்றின் பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக மல்வது ஓயா என்பது சிங்கள நாகரிகம் ஆரம்பமான இடமாகும், மகா விகாரை தேரவாத பௌத்தத்தின் மையமாகும். இந்த இரண்டு இடங்களையும் பாதுகாக்காமல் எந்த அபிவிருத்தித் திட்டம் செய்தாலும் பயனில்லை.

இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் கிரிக்கெட் அபிவிருத்திக்காக ஒன்றரை பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால வீரர்களை உருவாக்கும் வகையில் கிராமப்புற பாடசாலைகளில் கிரிக்கெட்டை முன்னேற்றுவதே இதன் நோக்கமாகும்.

பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம்.சமுர்த்திக்குப் பதிலாக அஸ்வெசும திட்டத்தை உருவாக்கி, மக்களுக்கு வழங்கும் தொகையை மூன்று மடங்காக உயர்த்தினோம். விவசாயத்துக்காக வழங்கப்படும் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கவும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகை அடிப்படையில் வாழும் மக்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இங்குள்ள விவசாயிகளின் பெற்றோர்கள் 60களில் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு, பயங்கரவாத பிரச்சினைகளினால் அவதிப்பட்டனர். ஆனால் அவர்கள் விவசாயத்தை மறக்கவில்லை. நாட்டிற்கு அவசியமான உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்து வந்தனர். அதற்காக நாட்டின் நன்றி செலுத்தும் வகையில் காணி உறுத்தாவணம் வழங்கப்படுகிறது.

ஸ்வர்ணபூமி, ஜெயபூமி பத்திரங்களை வைத்துக்கொள்ள வேண்டுமானால் அப்படியே இருக்கலாம். காணி உறுதிப்பத்திரம் பெற விரும்பும் எவரும் விண்ணப்பிக்கலாம். இந்த காணி உறுதிப்பத்திரம் வழங்குவது அடுத்த ஆண்டு – முதல் காலாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

உலகம் வளர்ச்சியுடன் , நாம் நவீன துறைகளுக்கு திரும்ப வேண்டும். நமது ஏற்றுமதித் துறையை முன்னேற்றுவதோடு விவசாயம் குறித்து, நவீன முறையில் மீண்டும் சிந்திக்க வேண்டும். 1972ல் ஏற்றுமதி விவசாயத் தொழில் வீழ்ச்சியடைந்தது. இம்முறை வழங்கப்படும் காணி உரித்தாவணத்துடன் , ஏற்றுமதி விவசாயத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இங்கு விளையும் பொருட்களை விநியோகிக்க கமநல சேவை மையங்களுக்கு பதிலாக கமநல நவீனமயமாக்கல் சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும். பயிரிடப்பட்ட பயிர்களை பாதுகாத்து வைக்கும் திறன் மற்றும் தேவைப்பட்டால் ஏற்றுமதி செய்யும் திறன் ஆகியவற்றையும் தீர்மானிக்க முடியும்.

அடுத்த பத்து ஆண்டுகளில், உலக மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கும். தேவையான உணவை வழங்குவதன் மூலம், நீங்கள் அதிக அந்நிய செலாவணி சம்பாதிக்கலாம். அனைத்து கிராமங்களையும் ஏற்றுமதிக் கிராமங்களாக முன்னேற்றி ஏற்றுமதிப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைப்பதன் ஊடாக – அதிக அந்நியச் செலாவணியை பெற முடியும்” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்