சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

🕔 November 22, 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – இரண்டு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநிறுத்தம் இன்று ( 22) முதல் அமுலுக்கு வரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த – நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா உரையாற்றிக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இடையூறு செய்திருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது பாய முயற்சித்தனர். இதன்போது எதிர்க்கட்சித் தலைவரின் ஒலிவாங்கியைப் பிடித்து திருப்பி, அதில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பேசினார்.

இந்த இடையூறின் ஒரு கட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் கையில் இருந்த ஆவணம் ஒன்றை – சனத் நிஷாந்த பறித்துக் கொண்டு ஓடினார்.

இதனையடுத்து நாடாளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments