விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிக்கு, ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பதவி விலகினார்

🕔 November 21, 2023

ஸ்ரேல் தலைநகர் – ‘டெல் அவிவ்’இல் அமைந்துள்ள இச்சிலோவ் வைத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து – அவி ஷோஷன் விலகியுள்ளார் என்று ‘தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 85 வயதான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் எனும் பெண், காஸாவில் 16 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டமையை அடுத்து, அவர் ஊடக சந்திப்பை நடத்துவதற்கு இச்சிலோவ் வைத்தியசாலையின் செய்தித் தொடர்பாளர் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் போராளிகளால் தான் கடத்தப்பட்ட போது ஆரம்பத்தில் வன்முறைக்கு ஆளான போதிலும், பின்னர் அவர்கள் தன்னை நன்றாகக் கவனித்ததாகவும், மென்மையான நடந்துகொண்டதாகவும், விடுவிக்கப்பட்ட பணயக்கைதி லிஃப்ஷிட்ஸ் – வைத்தியசாலை வளாகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் விவரித்தார். அது இஸ்ரேலில் சர்ச்சையத் தூண்டியது.

ஹமாஸ் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட அவர், நிலக்கீழ் சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தாக கூறினார். இதேவேளை, தினமும் வைத்தியரொருவர் வந்து மருந்துகள் வழங்கி, தனக்கு சிகிச்சையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த ஊடக சந்திப்பில் பேசிய லிஃப்ஷிட்ஸ் – இஸ்ரேலின் தோல்விகள் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டதோடு, தன்னைச் சிறைப்பிடித்த ஹமாஸ் போராளிகள் பற்றி நன்றாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு ஹமாஸின் பிரச்சார வெற்றியாக கருதப்பட்டதாக, இஸ்ரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

லிஃப்ஷிட்ஸ் உள்ளிட்ட இரண்டு பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் முன்னிலையில் ஹமாஸ் விடுவித்தது. அதன்போது ஹமாஸ் போராளியொருவருடன் கைகுலுக்கி விட்டு, லிஃப்ஷிட்ஸ் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: “அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில்

Comments