“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில்

🕔 October 24, 2023
யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் – ஊடகங்களிடம் பேசுகிறார்

மாஸ் போராளிகள் தன்னை பணயக் கைதியாக வைத்திருந்தபோது, தன்னுடன் நட்பாக நடந்து கொண்டதாக – நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலியப் பெண்களில் ஒருவரான 85 வயதுடைய யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் (Yocheved Lifshitz) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ் -இல்- அமைந்துள்ள வைத்தியசாலைக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்; “ஒவ்வொரு நபரையும் ஒரு காவலர் கண்காணிக்கிறார். அவர்கள் எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டனர், எல்லா வகையான விஷயங்களைப் பற்றியும் பேசினார்கள். அவர்கள் மிகவும் நட்பாக இருந்தனர்” எனக் கூறினார்.

“அவர்கள் எங்களுக்கு பிட்டா ரொட்டி (pitta bread), கடினமான சீஸ் (hard cheese), குறைந்த கொழுப்புக் கொண்ட கிரீம் சீஸ் மற்றும் வெள்ளரிக்காய் (cucumber) ஆகியவற்றைக் கொடுத்தார்கள். அதுவே நாள் முழுவதும் எங்கள் உணவாக இருந்தது” என, தனது அனுபவத்தை அவர் விபரித்தார்.

மேலும், “எல்லாத் தேவைகளையும் கவனித்துக்கொள்பவர்கள் அங்கு இருந்தனர்” எனவும் யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் கூறினார்.

ஹமாஸ் துப்பாக்கிதாரியுடன் கை குலுக்கிக் கொண்டதன் அர்த்தம் என்ன என்று – இதன்போது ஊடகவியலாளர் கேட்டபோது “அவர்கள் எங்களை மிகவும் அழகாக நடத்தியதால்” என, அவர் பதிலளித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் பணயக் கைதியான யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் நேற்று ஒப்படைக்கப்பட்டபோது, சில அடிகள் நடந்து சென்ற அவர், பின்னர் அங்கிருந்த ஹமாஸ் போராளியை நோக்கி நடந்து, அவருடன் கைகுலுக்கி விட்டு விடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடக சந்திப்பில் பேசிய யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் மேலும் பேசும்போது, “ஹமாசின் முந்தைய ‘எச்சரிக்கையை’, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை – போதுமான அளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை” என குற்றஞ்சாட்டினார்.

“அவர்கள் (ஹமாஸ்) உண்மையிலேயே தயாராக இருப்பதாகத் தோன்றியது. நீண்ட காலமாக அதை மறைத்துவிட்டனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட போது ஹமாஸ் போராளியுடன் கைகுலுக்கும் யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ்

தொடர்பான செய்தி: ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்