விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 12 ஆயிரம் பேர் மரணம்: சுகாதார அமைச்சர் தகவல்

🕔 November 20, 2023

விபத்துக்கள் காரணமாக வருடத்துக்கு சுமார் 01 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும், 12000 மரணங்கள் பதிவாகுவதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை, இந்த பிரச்சினையைச் சுற்றியுள்ள குறிப்பிடத்தக்க ஆபத்து மற்றும் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

காயங்களைத் தடுப்பது தொடர்பில் அண்மையில் ‘வோட்டர்ஸ் எட்ஜ்’இல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே – அவர் இந்த விடயங்களை வெளியிட்டார்.

இந்த விபத்துகளால் ஆண்டுதோறும் சுமார் 12,000 இறப்புகள் ஏற்படுகின்றன, இது சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,000 இறப்புகள் அல்லது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35 இறப்புகளுக்கு சமமாகும்.

“போக்குவரத்து விபத்துகளால் ஆண்டுக்கு சுமார் 3,000 பேர் உயிரிழக்கின்றனர், மூச்சுத்திணறல் (கழுத்து நெரிக்கப்படுதல் உட்பட) காரணமாக சுமார் 2,000 நபர்கள் மரணிக்கின்றனர். அதே நேரத்தில் நீரில் மூழ்குதல், விழுதல் காரணமாக முறையே 1,000 மற்றும் 1,500 இறப்புகள் பதிவாகின்றன. பல்வேறு வகையான விசம் காரணமாக 1200 பேர் மரணிக்கின்றனர். மின்கசிவு, தீக்காயம் மற்றும் விலங்குகளின் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்”. என கூறிய அவர், 15-44 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்த விபத்துகளுக்கு ஆளாகுவதாகவும் தெரிவித்தார்.

“இந்த உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணங்களில், விபத்துக்கள் முதலிடம் வகிக்கின்றன. இந்த ஆபத்தான போக்கு – சமூக பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் இந்த பிரச்சினைகளை கையாள்வதில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் உடனடி கவனத்தையும் நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்