அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு

🕔 November 18, 2023

காஸாவிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து அங்குள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் அவகாசம் வழங்கியுள்ளதாக அங்குள்ள வைத்தியர் ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் சிக்கியுள்ள காஸா நகரிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையை இஸ்ரேலியப் படைகள் சூறையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிலைமை குறித் உமர் சகூத் என்பவர் கூறுகையில், தானும் மற்ற வைத்திய ஊழியர்களும் வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய படைகளால் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிவத்துள்ளார். மேலும் ஆனால் வெளியே காட்சிகள் “பயங்கரமாக” உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அல்-வஹ்தா வீதி வழியாக வெளியேறும்படி எங்கிடம் கூறப்பட்டது. டசின் கணக்கான இறந்த உடல்கள் சாலையில் சிதறிக்கிடக்கின்றன” என்று அவர் அல் ஜசீராவிடம் குறிப்பிட்டுள்டளார். “நடக்க முடியாத – வீடற்ற பல மக்கள் திறந்த வெளியில் விடப்படுகிறார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.

அல்-ஷிஃபா வைத்தியசாலையில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையானது “சுகாதாரம் மற்றும் தூய்மை இல்லாத” நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மூன்று வாரங்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கைக்குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒக்ஸிஜன் இல்லாமல் உள்ளனர்” என்றும் உமர் சகூத் தெரிவித்துள்ளார்.

நொவம்பர் 11ஆம் திகதி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் – 04 குறைமாத குழந்தைகள் உட்பட 40 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அல்-ஷிஃபா வைத்தியசாலை நிர்வாகிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தண்ணீர் மற்றும் கழிவுநீரை இயக்குவதற்கு இஸ்ரேல் ஒரு நாளைக்கு இரண்டு எரிபொருள் டிரக்குகளை காஸாவில் அனுமதிக்க உள்ளது. ஆனால் இந்த தொகை போதுமானதாக இல்லை என்று உதவி குழுக்கள் கூறுகின்றன.

காஸாவில் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. நோய் மற்றும் பட்டினி பற்றிய அச்சங்களுக்கு மத்தியில் ஒரு பரந்த மனிதாபிமான நெருக்கடி அங்கு ஏற்பட்டுள்ளது.

ஒக்டோபர் 07 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 12,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்