பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு

🕔 November 18, 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவியை நீடிப்பதற்கான அங்கிகாரத்தை வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபைபின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மறுத்து விட்டதாவும், இதனால் குறித்த சபை பிளவுபட்டுள்ளது என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த பொலிஸ் மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம், புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்காமல், தற்போதுள்ள பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரட்னவின் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்து வருகின்றார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை – புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு டிரான் அலஸ் வற்புறுத்துகின்ற அதேவேளை – ஜனாதிபதி அதனை எதிர்க்கின்றார்.

இதன் விளைவாகவே தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சேவைக்காலம் நிறைவடைந்த பின்னரும், அவருக்கு நான்கு முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக நொவம்பர் 03ஆம் திகதியன்று மூன்று வாரங்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

இருந்தபோதிலும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மேற்படி பதவி நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையினால் நேற்று ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

அரசியலமைப்பு சபையிலுள்ள மூன்று சிவில் சமூக உறுப்பினர்களும், இன்னும் சிலரும் மேற்படி பதவி நீடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, இறுதி முடிவு எடுக்க அரசியலமைப்பு சபை இரண்டாவது முறையாக இன்று கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சேவை நீட்டிப்பு – அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் இல்லாமல் செல்லுபடியாகுமா அல்லது அரசியலமைப்பின் அடிப்படையில் செல்லுபடியாகுமா என்பதில் சட்டத் தெளிவின்மை உள்ளது.

அரசியலமைப்புச் சபை என்பது 10 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி (திருமதி) தில்குஷி அனுலா விஜேசுந்தரே, கலாநிதி (திருமதி) தினேஷா சமரரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகியோர் இதன் உறுப்பினர்களாவர். இன்னும் ஒரு பதவி வெற்றிடமாக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்