போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம்

🕔 November 9, 2023

– முனீரா அபூபக்கர் –

ண்டி – போகம்பர சிறைச்சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹலபொல மாளிகையை – தலதா மாளிகை ஏற்காவிட்டால், அதனை முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த சொத்தை அபிவிருத்தி செய்வதற்கு சுமார் 147 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இந்த சொத்து தலதா மாளிகைக்கு வழங்கப்படுமாயின் அபிவிருத்திப் பணிகளுக்காக செலவிடப்பட்ட 147 மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மீள செலுத்த வேண்டும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். தலதா மாளிகை இந்த தொகையை செலுத்த விரும்பவில்லை என்றால், இந்த சொத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

கண்டி நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், எஹலபொல மாளிகை – நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டது. இந்த மாளிகையை தலதா மாளிகைக்கு மாற்றுவதற்கு சுமார் 06 மாதங்களுக்கு முன்னர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த சொத்தை அபிவிருத்தி செய்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை மீள செலுத்துவது தொடர்பில், தலதா மாளிகை தெளிவான பதிலை வழங்கவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கண்டறிந்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்கிழமை (7) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

அமைச்சசின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க – ஆலோசனைக் குழுவில் பங்கேற்கும் அதிகாரிகள் பணியாற்ற வேண்டுமென, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் தமது அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றதாகவும், ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும், அதற்கு அமைச்சின் அதிகாரிகளை கடுமையாக குற்றம் சுமத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்