அங்கவீனர்களுக்கான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரவும், அவர்கள் பற்றிய பாடநெறியை பல்கலைக்கழகத்தில் உள்வாங்கவும் நடவடிக்கை

🕔 November 8, 2023

ங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

‘அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற மனநிலையில் இருக்க வேண்டிய சமூகமில்லை’ என்பதே அரசின் கொள்கை எனவும், அவர்களை இனிமேலும் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதக் கூடாது என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைகக் கூறினார்.

ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவிக்கையில்;

”சுமார் பதினாறு லட்சம் அங்கவீனர்கள் இதுவரை முறையாக சமூக மயப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் முழுமையான வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் எதிர்வரும் வருடத்தில் அவர்களுக்கான வேலைத்திட்டத்தை நாம் சிறப்பாக நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

டிசெம்பர் மாதம் முதலாம் திகதி சர்வதேச அங்கவீனர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதனையொட்டி ஒரு ஆரம்ப நிகழ்வாக அங்கவீன சமூகத்தையும் ஏனைய சமூகத்தைப்போன்று, வலுவூட்டுவதற்காகவும் அவர்களை அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக்கொள்ளவும், அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரமாணங்களுக்கு ஏற்பவும் சுற்றுலாத் துறையில் அங்கவீன சமூகத்தை இணைத்துக்கொள்ளும் வகையிலும், ‘EMPO 2023’ என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சியொன்றை ஆரம்பித்து, கொழும்பு – கண்டி வரை அங்கவீனர்களுடன் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோம்.

எம்மைப் போன்று அவர்களுக்கும் அதே உரிமைகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

புகையிரதக் கட்டமைப்பு உள்ளிட்ட முழுமையான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பிலும், மதஸ்தலங்களிலும் அங்கவீனர்களுக்கான பயண வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை உறுதியாகத் தெரியப்படுத்துவதே இந்த கொழும்பு – கண்டி புகையிரதப் பயணத்தின் விசேட நோக்கமாகும்.

மேலும் இந்த வேலைத்திட்டத்தை வருடாந்தம் நடத்துவதன் மூலம், சர்வதேச அளவில் அங்கவீனர்களும் சுற்றுலாப் பயணிகளாக இந்நாட்டுக்கு வருகை தருவதை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், அங்கவீனர்கள் தொடர்பான சட்டத்தை திருத்தி புதிய சட்டமொன்றைக் கொண்டு வருமாறு அங்கவீனமுற்றவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இது குறித்து பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றாலும் கூட, இதுவரை இந்த சட்டத் திருத்தம் முறையாக நடைபெறவில்லை.

எனவே சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் – எதிர்வரும் வருடத்தின் முதல் காலாண்டில் அது தொடர்பான பணிகளை நிறைவுசெய்து நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.

முக்கியமாக அங்கவீனர்களுக்கான சட்டப் பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இந்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அவசியமான பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

அங்கவீனர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் அவர்களை பங்கேற்கச் செய்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இதன் ஊடாக அவர்களைத் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற நிலையில் இருந்து விடுபட்டு, இரண்டாம் தரப் பிரஜைகளாக அவர்களைக் கருதும் சூழலை மாற்றுவோம்.

மேலும், வலுவூட்டல் செயல்முறையுடன் அவர்களுக்கான ஓய்வூதிய முறை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உத்தேச வரவு – செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவில் நாம் கூறியுள்ளோம். மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பாடநெறியை (disability studies) பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்வாங்கவும் திட்டமிட்டுள்ளோம். அதன் ஊடாக அவர்களுக்கான தொழிநுட்பத் திறனுடன் கூடிய உபகரணங்களைத் தயாரித்தல் உட்பட அவர்களுக்கான ஏனைய வசதிகளை ஏற்படுத்தவும், அவர்கள் தொடர்பான மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்