கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல்

🕔 November 6, 2023

– அபு அலா –

கிழக்கு மாகாணத்திலுள்ள 51 சிறுவர் அபிவிருத்தி இல்லங்களில் 1204 பிள்ளைகளும், 04 அரச பாதுகாப்பு இல்லங்களில் 45 பிள்ளைகளும் பராமரிக்கப்படுவதாக கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தெரிவித்தார்.

உலக சிறுவர் தினத்தையொட்டி ‘எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்’ எனும் தொனிப்பொருளில் – கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்ட, மாகாண மட்ட சிறுவர் தின நிகழ்வு நேற்று (05) திருகோணமலை ஹிந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்;

“சிறுவர் அபிவிருத்தி இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்ற பிள்ளைகளில் மிகத் திறமையானவர்களும் இருக்கின்றனர். இம்முறை வெளியான பெறுபேறுகளின் படி – புலமைப்
பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் போன்ற பரீட்சைகளில் அவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஒருவரும், க.பொ.த சாதாரண தரப்
பரீட்சையில் 8A சித்திபெற்ற 2 பேரும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தது பல்கலைக்கழகத்திற்கு 22 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்” என்றார்.

“கல்வியில் மட்டுமல்ல விளையாட்டு, கலை, கலாசார மற்றும் மேடை நாடகம், பேச்சு, பாடல், இசை போன்ற பல்வேறுபட்ட திறன்கொண்டவர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை இன்றைய நிகழ்வில் பாராட்டப்படுகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி. .மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே. முதளிதரன், கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சின் அதிகாரிகள், கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு மேடை நாடகம், பேச்சு, பாடல், இசை போன்ற நிகழ்ச்சிகளில் – தேசிய மற்றும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முதல்நிலை பிள்ளைகள், மாவட்ட ரீதியில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற அணியினர், புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண
தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியவர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டப்பட்டு – பதக்கம் அணிவித்து சான்றிதழ், பரிசுப்பொதிகள், கிண்ணங்கள் போன்றவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்