இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள்

🕔 November 1, 2023

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 370 பேர் கொல்லப்படுகின்றனர் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன் சுகாதார அமைச்சு – ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 25ஆம் திகதி வரையில் மரணமானவர்கள் தொடர்பில் வெளியிட்ட பட்டியலை மையப்படுத்தி இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி போர் ஆரம்பிக்கப்பட்ட ஒக்டோபர் 07ஆம் திகதி 256 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒக்டோபர் 25ஆம் திகதி 487 பேர் பலியானதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகளுக்கு அமைய ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் காஸாவில் 15 பலஸ்தீனர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களில் 06 பேர் சிறுவர்களாவர். இதேவேளை ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 35 பேர் காயமடைகின்றனர்.

ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 42 குண்டுகள்

சராசரியாக 42 குண்டுகள் ஒவ்வொரு மணித்திலாயத்துக்கும் காஸா மீது போடப்படுகின்றன. இதில் 12 கட்டடங்கள் அழிக்கப்படுகின்றன.

காஸாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்டவர்களில் 73 சதவீதமானோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களாவர்.

காஸாவின் மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதாவது சுமார் 1.7 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் காஸாவின் 08 அகதிகள் முகாம்களில் அல்லது அவற்றுக்கு அருகில் வாழ்கின்றனர்.

உலகில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினை

இந்த முகாம்கள் 1948ஆம் ஆண்டு ‘நக்பா’வின் (அரபு மொழியில் ‘பேரழிவு’) பின்னர், அதாவது 750,000 பலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டும் இஸ்ரேல் படையினரால் வெளியேற்றப்பட்டபோது அமைக்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு நடந்த போரின் போது, இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீன் முழுவதையும் ஆக்கிரமித்தது. இதன்போது 300,000 பலஸ்தீனர்களை அவர்களது வீடுகளில் இருந்து இஸ்ரேல் படை வெளியேற்றியது. இது ‘நக்சா’ என்று அறியப்பட்டது, அதாவது அரவு மொழியில் இதற்கு ‘பின்னடைவு’ அல்லது ‘தோல்வி’ என்று பொருளாகும்.

பலஸ்தீன அகதிகளின் அவல நிலைதான் – உலகின் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாத அகதிகள் பிரச்சனைகளாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்