போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு

🕔 October 27, 2023
காஸாவில் ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்பெண் ஒருவர் பதாகையை ஏந்தி நிற்கிறார்

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை, ஒக்டோபர் 07ஆம் திகதி தாக்குதலின் போது தம்மால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க முடியாது என, ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஹமாஸ் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கொமர்சன்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, காஸாவை ஆளும் குழுவால் போர்நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்படும் வரையில், தாம் வைத்திருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க முடியாது என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர் 07 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதலின் போது, பாலஸ்தீனத்திலுள்ள பல்வேறு பிரிவுகளால் காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைவரையும் கண்டுபிடிக்க, தமக்கு காலம் தேவை என்று ஹமாஸின் அபு ஹமிட் என்ற அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

ரஸ்யாவின் – மொஸ்கோவுக்கு வியாழக்கிழமை வந்த ஹமாஸ் தூதுக்குழுவின் உறுப்பினர் அபு ஹமிட், போரின் முதல் நாட்களில் இருந்து ‘பொதுக் கைதிகளை’ விடுவிக்கும் தனது விருப்பத்தை ஹமாஸ் அறிவித்ததாக தெரிவித்தார்.

“காஸா பகுதியில் பிணைக் கைதிகளைக் கண்டுபிடித்து விடுவிக்க, எங்களுக்கு நேரம் தேவை” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

காஸா மீதான இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் அபு ஹமீட் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், ஏற்கனவே தம்மால் ஒக்டோபர் 07ஆம் திகதி பிடிக்கப்பட்ட 04 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்