நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’

🕔 October 26, 2023

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியும், நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்ததாகவும், ஆனால் இப்போது நாய்களைப் போல குரைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி வழங்கியமை தொடர்பில், இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் விமர்சித்தமை தொடர்பில் பதிலளிக்கும் போது, லான்சா இதனைக் கூறினார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பைப் பற்றி நிமல் லான்சா குறிப்பிடுகையில், ஜனாதிபதி – விஞ்ஞான ரீதியாக அமைச்சுக்களை ஒருங்கிணைத்துள்ளார் என்றும், இது ஒரு பயனுள்ள முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.

“நமலும் சாகரவும் அதை எதிர்த்துப் பேசினால், அவர்கள் தலையில் ஏதேனும் அசாதாரணம் இருக்கிறதா என்று சோதிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

சாகர காரியவசம் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பொய்யாகக் கூறுவதற்குப் பதிலாக, அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டு இந்த அறிக்கைகளை வெளியிட வேண்டும் எனவும் லான்சா குறிப்பிட்டார்.

“அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தைரியம் காரியவசத்துககு உள்ளதா என்பது சந்தேகம்தான். ஏனெனில் அது அவர்கள் அனைவரையும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் தள்ளக்கூடும்” என்று அவர் மேலும் கூறினார்.

தனது சொந்த சித்தப்பா கோட்டாபய ராஜபக்ஷ – அமைச்சரவையை நான்கு தடவை மாற்றியமைத்த போது பேசாமல் சும்மா இருந்த நாமல் ராஜபக்ஷ, இப்போது சில அமைச்சர்களை ஜனாதிபதி மாற்றியமைத்தமைக்கு, ‘பயனற்ற சண்டித்தனப் பேச்சுக்களை’ வெளியிடுவதாகவும் குறிப்பிட்டார்.

“கோட்டாபய ராஜபக்சவை கேள்வி கேட்க நாமலுக்கு ஏன் தைரியம் வரவில்லை? அவரும் சாகரவும் தங்களின் தலைகளைப் பரிசோதிக்க வேண்டும். நாட்டை அழித்த பிறகு இவர்கள் பேசுகிறார்கள்” என்று நிமல் லான்சா கடுமையாக சாடினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்